Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 03 ஜனவரி (ஹி.ச.)
திருப்பதி ரயில் நிலையம் அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது.
நேற்று இரவு கோவில் நடை அடைக்கப்பட்ட பின் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள், மாநில போலீசார், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் உள்ளிட்ட காவல் படையினர் கோவிலுக்கு வழக்கம்போல் காவல் இருந்தனர்.
அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உயரமான கோவில் மதில் சுவர் மீது ஏறி அங்கிருந்து ராஜகோபுரம் மீது ஏறி கொண்டு இருப்பதை பார்த்த பாதுகாப்பு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வயர்லெஸ் மூலம் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த மற்ற ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.
அங்கிருந்து தகவல் தேவஸ்தான விஜிலன்ஸ் துறை உயர் அதிகாரிகள், போலீஸ் எஸ்பி, காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் பறந்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் எஸ் பி, தீனைப்பு படையினர் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில் ராஜகோபுரத்தின் மீது ஏறிய அந்த மர்ம நபர் அங்கிருக்கும் தங்க கலசங்களை உடைத்து சேதப்படுத்த முயன்றார்.
இதற்கிடையே அந்த நபரை அங்கிருந்து கீழே இறக்குவதற்கான முயற்சிகளில் பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த நபர் குடிப்பதற்கு மது கொடுத்தால் மட்டுமே நான் கீழே இறங்குவேன் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.
தீயணைப்பு படையினர் இரும்பு ஏணியை பயன்படுத்தி ராஜ கோபுரந் மீது ஏறி சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின் அந்த நபரை கீழே இறங்க செய்தனர்.
அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவருடைய பெயர் திருப்பதி என்றும் தெலுங்கானா மாநிலம் நிஜமாவாத் மாவட்டத்தில் உள்ள பெத்த மல்லாரெட்டி காலனி அவருடைய ஊர் என்றும் தெரியவந்தது.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மது அருந்தி போதையில் இருந்த நபர் ஒருவர் உயரமான மதில் சுவர் மீது ஏறி சுமார் 60 அடி உயரமுள்ள ராஜ கோபுரத்தின் உச்சியை அடையும் வரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி ஏற்பட்டு கோவிந்தராஜ் சாமி கோவிலுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் சூழல் இதனால் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam