Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 03 ஜனவரி (ஹி.ச.)
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க 01.01.2026-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள நபர்கள் எவரும் விடுபடாமல் இருக்கவும், தகுதியற்றவர்களை நீக்கவும் இன்று (03.01.2026) மற்றும் நாளை(04.01.2026) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இம்முகாம்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6-ஐயும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் 6A-ஐயும், ஆதார் எண் இணைக்க படிவம் 6B-ஐயும் சமர்ப்பிக்கலாம். அதேபோல், பெயர் நீக்கத்திற்கு படிவம் 7-ஐயும், முகவரி மாற்றம் மற்றும் இதர திருத்தங்களுக்கு படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து, அவற்றுடன் வயது மற்றும் இருப்பிடச் சான்றுகளாக ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், மின் ரசீது அல்லது வங்கிப் புத்தகம் போன்ற ஆவணங்களின் நகல்களையும், கட்டாயமாக உறுதிமொழி படிவத்தையும் இணைத்து வழங்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் இந்தச் சேவைகளைப் பெற https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். 2026-ம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால், வாக்காளர்கள் இந்தச் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தங்களின் விபரங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b