Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜனவரி (ஹி.ச.)
மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730ஆம் ஆண்டு பிறந்த வீரமங்கை இராணி வேலுநாச்சியார். சிறுவயதிலே வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்தார்.
1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் இராணியானார். 1772ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்த போது, மன்னர் முத்துவடுகநாதர் கடுமையாகப் போர் புரிந்தபோதும் சூழ்ச்சி காரணமாக வீர மரணமடைந்தார்.
பின்னர், வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்கள், மைசூர் மன்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் அக்காலத்தில் திண்டுக்கல் பகுதியை ஆண்ட கோபால் நாயக்கர் ஆகியோர் உதவியுடன் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்று சிவகங்கை சீமையை 1780ஆம் ஆண்டு மீட்டார்.
அதன்பின், 16 ஆண்டுகள் சிவகங்கைச் சீமையைச் சிறப்பாக 2ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1976 அன்று மறைந்து அழியாப் புகழ் பெற்றார்.
தமிழ் மண்ணின் தலைசிறந்த வீராங்கனை இராணி வேலுநாச்சியாரின் வீரத்தினை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து போற்றிடும் வகையில், 2024 - 2025ஆம் ஆண்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்னை. கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, நிறுவப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் திருவுருவச் சிலை முதலமைச்சர் 19.9.2025 அன்று திறந்து வைத்தார்.
அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (03.01.2026) சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, துணை மேயர் மு. மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் ச.செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Hindusthan Samachar / vidya.b