Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜனவரி (ஹி.ச)
ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ந்தேதி காலமானார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஏ.வி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று
(ஜனவரி 04) நடைபெற்றது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏ.வி.எம்.சரவணன் ஊருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஏவிஎம் நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவை பற்றி பேசவே முடியாது.
பராசக்தி வசனத்தை பேசி பள்ளியில் பரிசு பெற்றவர் ஏவிஎம் சரவணன். ஏவிஎம் நிறுவன பொன் விழாவில் 190 கேடயங்களை மேடையில் நின்று கொண்டே கருணாநிதி வழங்கினார்.
கருணாநிதிக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நான் மேயராக இருந்த போது பள்ளி மாணவர்களை விமானத்தில் திருப்பதி அழைத்து செல்ல ஏவிஎம் சரவணன் காரணமாக இருந்தார்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
திரைப்படம் எடுக்குபோதே அனைத்து கோணங்களிலும் யோசிக்க கூடியவர் ஏ.வி.எம்.சரவணன். எனக்கு சினிமாவில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் உதவி செய்து இருக்கிறார். எனக்கு வருடத்திற்கு ஒரு படம் பண்ணுமாறு அறிவுறுத்தியவர். ஏ.வி.எம்.சரவணன் ஒரு ஜென்டில்மேன். ஏவிஎம் அலுவலகம் சென்றாலே பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும், என்று தெரிவித்தார்
நடிகர் கமல் பேசுகையில்,
சினிமாவில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தவர் ஏ.வி.எம்.சரவணன். அவர் சகலகலா வல்லவர் தான். எனக்கு 65 ஆண்டுகால நட்பு உள்ளது. சினிமாவை புரிந்து கொண்டது ஏவிஎம் ஸ்டுடியோவில் தான்.
இங்கு பயின்றது எனக்கு பெருமை. குழந்தையாக சென்ற என்னை வளர்த்துவிட்டது ஏவிஎம் நிறுவனம் தான். ஏவிஎம் நிறுவனத்தில் படித்த விஷயங்கள் தான் இன்றும் என்னை வழி நடத்துகிறது. ஏவிஎம் பள்ளியில் படித்து வெளியே வந்தவர்கள் அனைவரும் பெரிய நபராக உயர்ந்துள்ளனர், என தெரிவித்தார்.
கவியரசு வைரமுத்து பேசியதாவது,
இறப்புக்கும் வந்திருந்தார் மாண்புமிகு முதலமைச்சர் படத்திறப்புக்கும் வந்திருக்கிறார். தமிழ் கரை உலகம் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறது. ஏவிஎம் குடும்பம் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறது.
சரவணன் கலா ரசிகர் வெறும் தயாரிப்பாளர் மாத்திரமல்ல. பணத்துக்கு படம் தயாரிக்கிற கூட்டம் அல்ல ஏவிஎம் குடும்பம். கதை, நயம், மொழி, தமிழ், இசை, ஒப்பனை, நடிப்பு என்று எல்லாவற்றிலும் உச்சம் காண துடிக்கிற கூட்டம்.
தன் தந்தையார் மீதும் தன் குடிப்பிறப்பின் மீதும் சரவணனுக்கு காதல், பக்தி என்று தான் சொல்ல வேண்டும். மரணத்திற்கு முன்பு அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை எனக்கு வெளிச்சம் போட்டு காட்டின.
என் மரணத்திற்கு பிறகு என் மனைவி வெள்ளை சேலை அணியக்கூடாது. மங்களங்களை அழித்துக் கொள்ள கூடாது. நெற்றி போட்டு நிறைவோடு திகழ வேண்டும். எந்த ஆபரணத்தையும் என் மனைவி என் மரணத்தால் துறக்க வேண்டாம். தான் மரணித்தாலும் தனது மனைவி இந்த சமூகத்தால் மதிக்கப்படுகிற இடத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்ற அந்த நல்ல கணவனை எப்படி நாம் மறப்பது. நல்ல தயாரிப்பாளர், நல்ல தமிழ் ரசிகர், நல்ல கணவர், நல்ல தந்தை, நல்ல சமூக மனிதன்.
அவர் பணியாத திருமண வீடுகள் இல்லை. அவர் சென்று அஞ்சலி செலுத்தாத இறப்பு வீடுகள் இல்லை. ஏவிஎம் குடும்பத்துக்கே எல்லா நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளக்கூடிய ஒரே ஒரு ஒற்றை அடையாளம் எம் சரவணன் அவர் மறைந்து விட்டார் என்பது பௌதிகம் உண்மை.
எலும்பும் நரம்பும் சதையுமாய் அவர் இல்லை. ஆனால் உணர்வுகளாய் நிறைவுகளாய் நல்லெண்ணங்களாய் விழுமியங்களாய் அவர் நிலைத்து வாழ்வார். வாழ்க எம் சரவணன் அவர்கள் நினைவுகளும் புகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b