திமுக தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்பு செயலியில் ஒரே நாளில் 14,000-த்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் தாக்கல்
சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக-வும் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது
திமுக தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்பு செயலிக்கு ஒரே நாளில் 14,318 கோரிக்கைகள் தாக்கல்


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஆளுங்கட்சியான திமுக-வும் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை நேற்று

(ஜனவரி 03) முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துகளையும் பரிந்துரைகளையும் வழங்கலாம்.

இதனையடுத்து, மாநிலம் முழுக்கவும் கருத்துகளையும் பரிந்துரைகளையும் வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

செயலி கோரிகைகள் குறித்து தங்களின் யோசனைகளைத் தெரிவியுங்கள் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலியே, தொலைபேசி வழியாக 1,188, வாட்ஸ் ஆப் வழியாக 7,527, மின்னஞ்சல் வழியாக 251, இணையதளம் வழியாக 2015, கியூஆர் ஸ்கேன் (QR scan) வழியாக 692, ஏஐ (AI) வலைவாசல் வழியாக 2645 என மொத்தம் 14,318 கோரிக்கைகளும், பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளதாக திமுக கூறியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b