திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.) திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மொழிப்போர் தியாகியுமான எல். கணேசன் (92), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 04) காலமானார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளா
திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மறைவு -  முதல்வர் ஸ்டாலின் இரங்கல்


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மொழிப்போர் தியாகியுமான எல். கணேசன் (92), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 04) காலமானார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் - கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல். கணேசன் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன்.

சட்டமன்றம் - சட்டமேலவை - நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கருணாநிதியின் பாசத்தைப் பெற்ற 'எல்.ஜி.' அவர்கள், 1989-இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரது நாடாளுமன்றச் செயலாளராகவும் இருந்தார்.

நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார்.

திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்.

அவரது பிரிவால் வாடும் கழக உடன்பிறப்புகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b