Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 04 ஜனவரி (ஹி.ச.)
தஞ்சை மாவட்டம், பாலாஜி நகரில் உள்ள இல்லத்தில் திமுக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக இன்று (ஜனவரி 04) உயிரிழந்தார்.
மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும் தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன் அண்ணா, கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்ட திராவிட இயக்கத் தலைவராக திகழ்ந்தார். 3 முறை எம்எல்ஏவாக இருந்த எல்.கணேசன் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்திருக்கிறார்.
1980 ஆம் ஆண்டில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்து மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.
2004 இல் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வானார்.
வைகோ மதிமுகவை தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்ற எல்.கணேசன், சில ஆண்டுகளில் மீண்டும் திமுகவிற்கே திரும்பினார்.
எல்.ஜி. என அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட இவர், மொத்தம் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
சட்ட மேலவை, சட்டசபை, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் என்று 4 பதவிகளையும் வகித்தவர்.
வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த எல்.கணேசன் இன்று அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.
Hindusthan Samachar / vidya.b