தேசிய அளவில் ஜனவரி 10 முதல் 100 நாள் வேலைத் திட்ட மீட்பு இயக்கம் - காங்கிரஸ் அறிவிப்பு
புதுடெல்லி,4 ஜனவரி (ஹி.ச.) ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட (100 நாள் வேலை) ரத்துக்கு எதிராக நடத்தப்படும் தேசிய அளவிலான அந்தத் திட்ட மீட்பு இயக்கம் வரும் 10-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25 வரை நடத்தப்படும்’ என்று காங்கிரஸ்
தேசிய அளவில் ஜனவரி 10 முதல் 100 நாள் வேலைத் திட்ட மீட்பு இயக்கம் - காங்கிரஸ் அறிவிப்பு


புதுடெல்லி,4 ஜனவரி (ஹி.ச.)

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட (100 நாள் வேலை) ரத்துக்கு எதிராக நடத்தப்படும் தேசிய அளவிலான அந்தத் திட்ட மீட்பு இயக்கம் வரும் 10-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25 வரை நடத்தப்படும்’ என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த தேசிய அளவிலான இயக்கம் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி நடத்தப்படும் என காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:

மாநிலங்களுடன் எந்த வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகும்.

அந்த வகையில், பெண் தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், கிராமப்புற ஏழை மக்களின் பணி உரிமையைப் பாதுகாக்கவும், ஊராட்சி நிர்வாக (பஞ்சாயத்து ராஜ்) அமைப்புகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் தேசிய அளவிலான இந்த மீட்பு இயக்கத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுடன் காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டு ஒருங்கிணைந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.

தேசிய அளவிலான 100 நாள் வேலைத் திட்ட மீட்பு இயக்கம் வரும் 10-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

முதல் நாளில் மாவட்ட அளவிலான பத்திரிகையாளா் சந்திப்புகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

ஜனவரி 11-இல் மாவட்ட தலைமையிடங்களில் அடையாள கண்டன போராட்டங்கள் நடத்தப்படும்.

ஜனவரி 12 முதல் 29-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சிகள் அளவில் விளக்கக் கூட்டங்களும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

ஜனவரி 30-இல் வேலைக்கான உரிமையை வலியுறுத்தி வார்டுகள் அளவில் அமைதியான முறையில் தர்ணா போராட்டங்கள் நடத்தப்படும்.

பிப்ரவரி 7 முதல் 15-ஆம் தேதி வரை மாநில அளவிலான சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும்.

பிப்ரவரி 16 முதல் 25-ஆம் தேதி வரை 4 மாபெரும் பொதுக்கூட்டங்களுடன் இந்த தேசிய அளவிலான இயக்கம் நிறைவு செய்யப்படும்.

முன்னதாக, இந்த தேசிய அளவிலான இயக்கத்துக்கான தயாரிப்புக் கூட்டங்கள் ஜனவரி 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும்.

மத்திய அரசு கொண்டுவந்த ‘வளர்ந்த பாரத ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட’ சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. என்று தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM