Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 04 ஜனவரி (ஹி.ச.)
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, ஆற்றின் நிலையை ஆய்வு செய்ய ராஜஸ்தானைச் சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திரசிங்கை ஆணையராக நியமித்தது.
இதையொட்டி இன்று
(ஜனவரி 04) நெல்லை வந்த அவர், ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றை நேரில் ஆய்வு செய்தார். கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்ட அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த 10 ஆண்டுகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு தூய்மை திட்டங்களை முன்னெடுத்த போதிலும், அவர்கள் மாறுதலாகி சென்றதும் பணிகள் முடங்கி விட்டன. இதனால் நதி பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து கண்காணிக்க ஒரு பிரத்யேக ‘நோடல் அதிகாரி’ நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.
தாமிரபரணி நதி நீரை மீட்கும் பணிகளுக்கு ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் ஆகிய மூன்றுமே முக்கிய தடைகளாக உள்ளன. குறைந்த மழைப் பொழிவு உள்ள ராஜஸ்தானிலேயே என்னால் 23 நதிகளை மீட்க முடிந்த போது, வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை சீரமைப்பது மிகவும் எளிதான காரியம்.
இதற்கு நிர்வாகம், நீதித்துறை, மக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களிடையே நதி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அடுத்த 20, 30 நாட்களுக்குள் எனது விரிவான பரிந்துரைகளை சமர்ப்பிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b