பச்சை கடல் ஆமைகளை இறைச்சிக்காக வேட்டையாடியதாக 4 பேர் கைது
ராமநாதபுரம், 04 ஜனவரி (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வன உயிரின சரகம் சார்பில், வனச்சரக அலுவலர் தலைமையிலும், வனத்துறை குழுவினர் இணைந்து கடலோரம் முழுவதும் மற்றும் கடலுக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியின் போது, கீழக்கரை அ
Sea Turtles


ராமநாதபுரம், 04 ஜனவரி (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வன உயிரின சரகம் சார்பில், வனச்சரக அலுவலர் தலைமையிலும், வனத்துறை குழுவினர் இணைந்து கடலோரம் முழுவதும் மற்றும் கடலுக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ரோந்து பணியின் போது, கீழக்கரை அப்பா தீவுக்கு சுமார் 600 மீட்டர் முன்பாக நான்கு நம்பர் படகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவர்களை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அரசால் பாதுகாக்கப்பட்ட பச்சை நிற கடல் ஆமைகளை பிடித்து, அவற்றை அறுத்த நிலையில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை வனத்துறையினர் பிடித்து கீழக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து 50 கிலோ எடையுள்ள ஒரு பச்சை கடல் ஆமை மற்றும் 30 கிலோ எடையுள்ள இன்னொரு பச்சை கடல் ஆமை என இரண்டு ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பச்சை கடல் ஆமை இனத்தைச் சேர்ந்தவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர் குப்பம் மக்களுக்கு கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இத்தகைய சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை பிடித்தல், விற்பனை செய்தல் அல்லது அறுத்தல் போன்ற குற்றங்களுக்கு மூன்றாண்டு முதல் ஆறாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வன உயிரினம் காப்பாளர் ஆணைக்கிணங்க, கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து தீவிர சோதனை மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாதம் பச்சை கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலம் என்பதால், அவை கடற்கரைக்கு அருகே வரக்கூடும். இதனால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆமைகளை தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் செலுத்த வேண்டும் எனவும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கடலோரங்களில் கடல் ஆமைகளை கண்டால், அதனை வீடியோ அல்லது புகைப்படமாக பதிவு செய்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN