Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 04 ஜனவரி (ஹி.ச.)
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனி விமானத்தில் இன்று மாலை திருச்சி வருகிறார்.
நடப்பாண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசியல் சூழல் பரபரப்பாக மாறி வருகிறது.
தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பாஜக சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள முக்கிய பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட பிரச்சாரம், மதுரையில் ஆரம்பித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
பாஜக - வின் கொள்கைகள் மற்றும் அரசியல் நோக்கங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பயணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீண்ட பிரச்சாரத்தின் நிறைவு விழா வரும் இன்று ஞாயிறு 4 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளத்திவயல் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தர உள்ளார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு செல்லும் அவர், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பின்னர் சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவர், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அங்கு இரவு தங்குகிறார்.
நாளை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர், மன்னார்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
இதையடுத்து பகல் 1.20 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV