Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சுமார் ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ள இந்த அறிவிப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிய பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து அரசு ஊழியர்கள் மீதும், தொழிலாளர்கள் மீதும் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. முன்பிருந்த ஓய்வூதியத் திட்டம் ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டு ஊழியர்களின் பங்களிப்போடு கூடிய புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. பாஜக ஆளும் மாநில அரசுகள் உடனடியாக அதை நடைமுறைப்படுத்தின.
தமிழ்நாட்டில் அப்போதிருந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்தியது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களில் 6 லட்சம் பேர் புதிய பென்ஷன் திட்டத்திலும், 3.15 லட்சம் பேர் பழைய பென்ஷன் திட்டத்தின் கீழும் இருந்தனர்.
பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய பென்ஷன் திட்ட நிதியின் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நிதியை அது முதலீடு செய்யவில்லை. அதற்கு மாறாக அது எல்.ஐ.சியில் முதலீடு செய்தது. எல் ஐ சி யும் முழுமையாகத் தனியார் மயம் ஆக்கப்படுவதாக மோடி அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ள நிலையில் அதில் முதலீடு செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் சேமிப்புத் தொகைக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இப்படி நடக்குமென்ற அச்சத்தினால்தான் தங்களுக்குப் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராடினார்கள். 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அந்தக் கோரிக்கையைத் தாயன்போடு பரிசீலித்து இப்போது நிறைவேற்றித் தந்திருக்கிறார்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பென்ஷன் திட்டத்தில் ஒரு அரசு ஊழியர் கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தைப் பென்ஷனாகப் பெறுவார். பென்ஷன் பெறுபவர் இறந்துவிட்டால் அந்த பென்ஷன் தொகையில் 60% ஐ அவரது இணையர் குடும்பப் பென்ஷனாகப் பெறுவார். அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப் படியும் பென்ஷனர்களுக்கு உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வுபெறும் போது கிடைக்கும் தொகை 25 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பென்ஷன் பெறுவதற்கான பணிக் காலத்தை நிறைவு செய்யவில்லை என்றாலும் அதற்கிடையில் ஓய்வு பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் இந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கான நிதியைக் கொடுக்காமல் வஞ்சிக்கிற நேரத்திலும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவைக் கூடுதலாக ஏற்று இந்த பென்ஷன் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருப்பது அவர் எந்த அளவுக்கு அரசு ஊழியர்களின் மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்பதற்குச் சான்றாக உள்ளது.
தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் சுமார் 15 சதவீதம் பென்ஷனுக்காக செலவிடப்படுகிறது. 2020 -21 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கான ஊதியமும் பென்ஷனும் சேர்த்து ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு செலவிட்டது.. இப்போது அந்தத் தொகை மேலும் அதிகரித்திருக்கும். இதனால் பொருளாதார சுமை தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ஆகும். இந்த சிரமங்கள் எல்லாம் இருந்த போதிலும் அரசு ஊழியர்களின் நலன் கருதி மகத்தான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாண்புமிகு முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முழுமையாக ஈடுபட வேண்டுமென்றும், மீண்டும் இந்த நல்லாட்சி அமைந்திட ஆதரவு தர வேண்டும் என்றும் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ