Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 04 ஜனவரி (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த அருணா (27), பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
வீட்டு வேலை செய்யவில்லை என தாயார் ஜோதி கண்டித்ததால், கடந்த 29-ம் தேதி அருணா விஷம் அருந்தியதாக கூறி, பெற்றோர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அருணா உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திருப்பாலைவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அருணாவுடன் பணியாற்றி வந்த சக விஏஓ சிவபாரதி என்பவர், அருணா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில்,
பொன்னேரி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நானும், அருணாவும் நண்பர்களாக பழகி, பின்னர் காதலித்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதற்கு எனது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால், அருணாவின் பெற்றோர், இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலை ஏற்கவில்லை. அருணாவை மிரட்டிள்ளனர். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையில், அருணா உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொன்னேரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த காதலன் சிவபாரதியிடம் பொன்னேரி உதவி ஆணையர் சங்கர் விசாரணை நடத்தியுள்ளார்.
இதன் முடிவில் அருணா மரணத்திற்கான காரணம் குறித்த உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam