Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 05 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலமானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வருகிறார்கள்.
முக்கியமாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் மாட்டுப்பொங்கல் பண்டிகையான ஜனவரி 15-ம் தேதியும், பாலமேட்டி ஜனவரி 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் வரும் ஜனவரி 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் எனப்படும் பந்தக்கால் நடுகின்ற பணி இன்று (ஜனவரி 05) நடைபெற்றது.
தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், ஊர்ப் பெரியவர்கள், ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு, அவனியாபுரம் கோயிலருகே சிறப்பு பூஜைகள் செய்து மா இலைகள், வேப்பம் இலைகள் கட்டப்பட்ட பந்தக்கால் நடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சாலையோரங்களில் பார்வையாளர்கள் அமர்கின்ற மேடை, மாடுகள் உள்ளே வருவதற்கான வாடிவாசல் உள்ளிட்டவை அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் வழக்கம் போல், முதல் பரிசாக கார் வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b