Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் (03-01-26) அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், வெனிசுலா நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி கட்டிடங்கள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது.
குறிப்பாக லாகார்லோட்டா விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 40 வெனிசுலா மக்கள் இறந்துள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெனிசுலா நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க சிறைப்பிடித்து நாடு கடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.
கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ படத்தை வெளியிட்டு வெனிசுலாவில் இனிமேல் எங்கள் ஆட்சி தான் என டிரம்ப் அதிரடியாக தெரிவித்தார்.
இது குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது, “புதிய அரசு வெனிசுலாவை ஆளும் வரை, அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும். அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவோம். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா வலுவான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (05-01-26) சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை அமெரிக்க தூதரகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்துவதற்காக அங்கு வந்தனர்.
அப்போது போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும், அதன் பிறகு கைது செய்யுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN