Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
சென்னை ஜார்ஜ்டவுனில், சாலை ஆக்கிரமிப்புகளை அகறறும்படி, கடந்த 2025 ம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அவற்றை மாநகராட்சி கண்காணிக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், இதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவ்வாறு கண்காணித்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்காது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam