Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 05 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உறைபனி சீசன் நிலவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் பூமி, ஜிம்கானா பகுதிகளில் புல்வெளியில் உறைபனியும், அதற்கு மேல் பனிமூட்டமும், அதே சமயம் எதிர்மலையில் தென்படும் லேசான வெயிலும் சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் இரண்டு டிகிரியை எட்டியது. தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி வரை நிலவுகிறது.
இதன் காரணமாக ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல உறைபனி படிந்து காணப்பட்டது. உறைபனிப் பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதனிடையே, மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் தேயிலைச் செடிகள் மற்றும் விவசாயப் பயிர்கள் கருகி வருகின்றன. தேயிலைச் செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு, செடிகளில் கொப்புள நோய் தாக்கம் காணப்படுகிறது. தேயிலைச் செடிகளின் இளம் தண்டுப் பகுதி, இளம் இலைகளை இந்நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2020-க்கு முன் பனிப்பொழிவால் 3,700 ஏக்கர் முதல் 4,900 ஏக்கர் பரப்பில் தேயிலைச் செடிகள் கருகின. 2021-22-ல் பனிப்பொழிவு குறைந்ததால் 1,200 ஏக்கர் மட்டுமே தேயிலைச் செடிகள் பாதிக்கப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளாக பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், நடப்பு பருவத்தில் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தேயிலைச் செடிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறுகையில்,
தேயிலைத் தோட்டங்களில் உள்ள அதிக நிழல் தரும் சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும். கொப்புள நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றினால், தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்கலாம் என்று கூறுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b