Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கனிமொழிக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பல மாவட்டங்களில் திமுகவினர் அவரது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந் நிலையில், தவெக தலைவர் விஜய், கனிமொழியை தொலைபேசியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெகவை தொடங்கியது முதலாகவே திமுகவை தனது அரசியல் எதிரி என பிரகடனப்படுத்தி கடுமையாக விமர்சித்து வருபவர் விஜய்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி எனவும் தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் விஜய் கூறி வருகிறார்.
அதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் விஜய்யின் தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையேதான் கடும் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட பல நிர்வாகிகள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில், திமுக எம்.பி. கனிமொழியை விஜய் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது அரசியல் களம் மட்டுமின்றி பொதுவெளியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை, திமுக - அதிமுக உட்பட ஒன்றையொன்று எதிர்த்து அரசியல் செய்து வரும் கட்சிகளின் தலைவர்கள் இடையே பெரிதாக இணக்கமோ, நட்போ இருந்ததில்லை.
எனினும், சமீபகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைமை மாறி வருகிறது. பொதுவெளியில்
ஒருவரையொருவர் பார்க்க நேரிட்டால் பரஸ்பரம் புன்னைகைத்து கொள்வது, நலம் விசாரித்துக் கொள்வதுமாக அரசியல் சூழல் மேம்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யின் இந்த செயலும் ஆரோக்கியமான அரசியலுக்கான சமிக்ஞையாக தெரிகிறது.
இதனிடையே, கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள அமித் ஷா, கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் டெல்லி முகமாக நீண்டகாலம் அறியப்படுபவர் கனிமொழி என்பதால் அரசியல் வேறுபாடுகளை கடந்து பல தேசிய கட்சி தலைவர்களும், பிராந்திய கட்சிகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN