ஆட்சியில் பங்கு கொடுப்பதாக விஜய் கூறுவதில் தவறில்லை - சீமான்!
சிவகங்கை, 05 ஜனவரி (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த சீமான், அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தவெகவுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு
NTK Seeman


சிவகங்கை, 05 ஜனவரி (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த சீமான், அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தவெகவுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என விஜய் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சீமான், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியில் பல்வேறு கட்சிகள் பங்கு வகிக்கின்றன. அப்படியிருக்கும் போது, மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியில் பங்கு அளிப்பதாக கூறுவதில் தவறில்லை.

'ஆட்சியில் பங்கு' என்று விஜய் அறிவித்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது அரசியலில் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமே என சீமான் தெரிவித்தார்.

தொடர்ந்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கூட்டணி வைப்பீர்களா? என நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு சீமான், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை கூட்டணி என்பது எப்போதுமே கிடையாது.

வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம் . வரும் பிப்ரவரி 21-ம் தேதி நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டமானது, முழுக்க முழுக்க தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டட அறிவிப்பு.

அரசு ஊழியர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக அறிவிக்கப்பட்டதுதான் இது. இந்த அறிவிப்பு அரசின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என்றாலும், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சி என சீமான் தெரிவித்தார்.

மேலும், ஜாக்டோ-ஜியோ போன்ற அமைப்புகள் வலுவாக இருப்பதால், லட்சக்கணக்கான வாக்குகள் போய்விடும் என்ற அச்சத்தில் அரசு பணிந்து செல்கிறது. ஆனால், வலுவான அமைப்பு இல்லாத துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டுப் போராடும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு ஏற்பதில்லை என சீமான் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, திமுகவுக்கு சாதகமாக வந்த கருத்துக்கணிப்புகள் பற்றி பேசிய சீமான்,

தற்போது வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள் மீது எங்களுக்கு உடன்பாடு. அவை கருத்துக்கணிப்புகள் அல்ல. கருத்துத் திணிப்புகள்'. நாங்கள் பெறும் வாக்குகள் மட்டுமே உண்மையானவை.

மற்ற கட்சிகள் நிர்வாக பலத்தாலும், பணம் கொடுத்தும் வாக்குகளைப் பெறுகின்றன என அவர் விமர்சித்தார்.

மேலும் பேசிய சீமான், 2026 சட்டமன்றத் தேர்தல் தங்களுக்கு ஒரு சவாலே இல்லை. சமூக நீதி பேசும் திமுகவால், ஒரு பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முடியுமா? அல்லது கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவனை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற வைக்குமா?

ஊழல், லஞ்சம், தீண்டாமை மற்றும் பெண் அடிமைத்தனம் இல்லாத ஒரு புதிய நாட்டை உருவாக்குவதே நாம் தமிழர் கட்சியின் ஒரே இலக்கு. தமிழக அரசியலில் எங்கள் கட்சி வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது என சீமான் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN