Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஜனவரி (ஹி.ச)
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் வேள்வி யாத்திரை இன்று பழம்பெருமைமிக்க புதுக்கோட்டை மண்ணில் நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த நான்கரை ஆண்டுகளாக தனது திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வதைக்கும் தீயசக்தி திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் பெருமைகளை மீட்டெடுத்து, தலைநிமிரச் செய்யும் நோக்கத்தோடும், தாய் மீனாட்சி அம்மையின் அருளாசியோடும் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி மதுரை மாநகரத்தில் தொடங்கப்பட்ட நமது “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” வேள்வி யாத்திரை இன்று பழம்பெருமைமிக்க புதுக்கோட்டை மண்ணில் நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
லட்சோப லட்சம் மக்களின் பேராதரவுடனும், தாமரை சொந்தங்களின் உறுதுணையுடனும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும் ஒத்துழைப்புடனும், கடந்த 84 நாட்களில் 2400 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, 52 அமைப்பு மாவட்டங்களுக்கும், 33 அலுவல் மாவட்டங்களுக்கும் பயணம் செய்து பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளோம். மேலும், ஒவ்வொரு மாவட்டமும் திமுக ஆட்சியில் எதிர்கொள்ளும் கொடூரங்களைக் காணொளியாக ஒளிபரப்பியதுடன், மக்களின் மனக்குமுறலையும் காணொளியாக ஒளிபரப்பி, திமுக ஆட்சியில் தமிழகம் தவிப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.
இத்தகைய சிறப்புமிக்க யாத்திரையின் நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , தனிப்பெருமைமிக்க தமிழகம் திமுக ஆட்சியில் சீரழிந்து வருவதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
திக்கெட்டிலும் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு தமிழின் பெருமையை பறைசாற்றி வரும் வேளையில், திமுக அரசு இந்து வெறுப்பை தூக்கி பிடித்து அரசியல் செய்கிறது என்று கூறினார். மேலும், ஊழலில் சிறந்து விளங்கும் திமுக அமைச்சர்களை கொண்ட ஆட்சியால், துப்புரவு தொழிலாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைத்து தரப்பினரும் திமுக ஆட்சியில் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்ட நமது மத்திய உள்துறை அமைச்சர், வழிவழியாக வாரிசு அரசியலை வளர்த்தெடுத்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களை முதல்வர் பதவியில் அமர்த்த நினைக்கும் திமுகவின் பகல் கனவு முறியடிக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார். பின்பு 2026-இல் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஆணித்தரமாக கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துருப்பிடித்த இரும்புக்கர ஆட்சியால், ஊழல் மிகுந்து, சட்டம் ஒழுங்கு சிதைந்து, எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் புழக்கமும், சாராய வெள்ளமும் கரைபுரண்டு ஓடி, பாதுகாப்பு என்பது பெயரளவுக்கு கூட இல்லாமல், தமிழகம் குற்றங்களின் கூடாரமாக மாறிவருகிறது. இந்த கொடூர நிலையில் இருந்து தமிழகத்தை மீட்பதற்காக போடப்பட்ட சிறு அடித்தளமே நமது பயணம். எனவே யாத்திரையின் முடிவும் ஒரு தொடக்கமே. ஆக, இந்த பயணம் தந்த புது தெம்புடன், அடுத்த 100 நாட்கள் அயராது பாடுபடுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஒன்றிணைந்து, தீய சக்தி திமுகவை வீழ்த்தி, தமிழகத்தை மீட்டு, தலைநிமிரச் செய்வோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ