Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 05 ஜனவரி (ஹி.ச.)
சமீபத்தில் தவெகவில் இணைந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
‘‘மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியலுக்கான தேவை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள் தொலைந்தார்கள்.
அதை இட்டு நிரப்புவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தினுடைய நிழல் படியாத ஒரு கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் நாளைக்கு அதிகாரத்திற்கு வருகிறது என்கிற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியிலே இன்றைக்கு நெஞ்சில் உதயமாக இருக்கிறது.
இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு தவெகவோடு எல்லோரும் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அந்த ஆசை இருக்கிறது. ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் பயணித்து கொண்டிருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என் இருக்கைக்கு பக்கத்தில் இருந்தார். அவரிடம், ‘‘ நீங்கள் தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘‘எங்களுக்கு தவெக மீது காதல் இருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்து கொண்டது திமுகவை’’ என்று அவர் வருத்தத்துடன் சொன்னார்.
ஆகவே எல்லா கட்சிகளும் தவெக என்கிற நந்தவனத்துக்கு வருவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய ராஜதந்திர தளபதி விஜய்.
திருவண்ணாமலையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகளினுடைய மாநாடு வட மண்டல திமுக மாநாடு நடத்துகிறார்கள். அன்றைக்கு அரசியலில் ஆயிரம் பிறை கண்ட அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைத்ததின் மூலம் திமுக இளைஞரணி மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
டிசம்பர் திங்கள் ஐந்தாம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாருடைய நினைவு நாள். அவரது நினைவிடம் நோக்கி பயணம் நடத்துவதாக அறிவித்தார்கள். அன்றைக்கு தான் தவெக தலைவர் என்னை தவெகவில் என்னை இணைத்துக் கொண்டார்.
அன்றைக்கு நான் இணைந்த செய்தி வெளியாகியதே தவிர அந்த ஊர்வலம் நிகழ்ச்சியை எந்த தொலைக்காட்சியும் வெளிப்படுத்தவில்லை. ஆகவே எதிரியை எங்கே, எப்போது அடிக்க வேண்டும் என்ற லாபகம் தெரிந்த ஒரே தலைவர் இந்திய அரசியலில் இன்றைக்கு எங்கள் தலைவர் விஜய் மட்டும் தான்.
என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN