பனை விழாவில் குழந்தைகளுக்கு கள் வழங்கிய விவகாரத்தில் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
தருமபுரி, 05 ஜனவரி (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஆ.சப்பாணிப்பட்டி கிராமத்தில், பனைத் தொழிலாளர்கள் சார்பில் பனை மரங்களுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் ''பனை விழா'' நடைபெற்றது. அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிரு
Palm Festival


தருமபுரி, 05 ஜனவரி (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஆ.சப்பாணிப்பட்டி கிராமத்தில், பனைத் தொழிலாளர்கள் சார்பில் பனை மரங்களுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் 'பனை விழா' நடைபெற்றது.

அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிருந்து கள் இறக்கப்பட்டு படையலிடப்பட்டது. வழிபாடு முடிந்ததும், அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்குக் கள் வழங்கப்பட்டது.

சிறுவர்கள் கள்ளைப் பருகுவதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பனைத் தொழிலாளர்கள், கள் என்பது போதைப்பொருள் அல்ல, அது ஒரு சத்தான இயற்கை உணவுப்பொருள் என்று கூறித் தங்கள் செயலை நியாயப்படுத்தினர்.

மேலும், கேரளாவைப் போலவே தமிழகத்திலும் கள் இறக்குவதற்கு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விழாவில், குழந்தைகளுக்கு கள் குடிக்க வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN