பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பலமாக உள்ளது - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
வேலூர், 05 ஜனவரி (ஹி.ச) தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Porkodi Armstrong


வேலூர், 05 ஜனவரி (ஹி.ச)

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெற்றது.

இதில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் வலுப்படுத்தும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்,

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பலமாக உள்ளது. சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது

என்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,

மாநில பொறுப்பாளர்களுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகு உரிய நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பதவியேற்க வேண்டும் என்று அந்த கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து கட்சியின் புதிய தலைவராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி நியமிக்கப்பட்டார்.

ஆனால், குறுகிய காலத்திலேயே பல்வேறு காரணங்களால் பொற்கொடியை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி நீக்கியது.

இது கட்சி நிர்வாகிகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் முதல் நினைவு நாளில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN