Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 05 ஜனவரி (ஹி.ச.)
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கக் கவசங்கள் செப்பனிடும் பணியின் போது நடைபெற்ற தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 6 வாரங்கள் அவகாசம் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-இல், கருவறை கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்களைப் புதுப்பிப்பதற்காக, பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முடிந்து கவசங்கள் திரும்ப ஒப்படைக்கப் பட்ட போது, சுமார் 4 கிலோ தங்கம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ருக்கலாம் என சி.பி.ஐ.,க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் துாதரக ஊழியர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜனவரி 05) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மேலும், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 6 வாரங்கள் நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.
ஏற்கனவே வரும் ஜனவரி 19ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam