Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 10ம் தேதி முதல் உயர் வகுப்புகளுக்கும், 15ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் கீழ் வகுப்புகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்றன.
இதையடுத்து கடந்த 24ம் தேதி முதல் அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதி வரை சுமார் 12 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜனவரி 5ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜனவரி 5 ஆம் தேதி) திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகங்களின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், 2ம் பருவ பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
5-ந் தேதி இன்று அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள், இணையதள வசதிகள் சரியான முறையில் இயங்க வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக பள்ளி குடிநீர் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்பட்டதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.காலை உணவு, சத்துணவுக் கூடங்கள், பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். பழுதான கட்டிடங்கள், வகுப்பறைகள் பூட்டப்பட்டு, இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
2ம் பருவத்துக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் இன்றே வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b