Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 ஜனவரி (ஹி.ச.)
தெற்கு கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது.
இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 10-ந்தேதி வரையிலான 6 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தை பொறுத்தமட்டில் வறண்ட வானிலையே நிலவும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 3 நாட்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட அந்த நாட்களில், அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM