Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (5.1.2026) தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD), பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (OPSI), ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF – OoI) ஆகிய அமைப்புகளுடன் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0வை வெளியிட்டு, மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு ஆய்வறிக்கைகளையும் பெற்றுக் கொண்டார்.
ஐ.நா. பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையுடனான இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பாலினப் பாகுபாடற்ற ஆளுகை மற்றும் திட்டமிடலுக்கான நிறுவனத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலின சமத்துவ முன்னோக்குடன் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைதல், பாலினப் பாகுபாடற்ற திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்துதல், பொருளாதார வலுவூட்டலுக்கான வாய்ப்புகளை பெண்களுக்கு ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இவற்றை செயல்படுத்திட ஐ.நா. பெண்கள் அமைப்பு தமிழ்நாடு அரசிற்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகள் இச்செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு அரசின் தற்போதைய முயற்சிகளை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தில் பாலின சமத்துவம் மற்றும் நீடித்த வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைக்க, ஒரு கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆதரவை வழங்கும். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) புத்தாக்க அலுவலகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD) - பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (OPSI) மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
ஸ்வீடனில் உள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) புத்தாக்க அலுவலகம், உலகளவில் தமிழ்நாட்டினை துணை தேசிய அளவிலான முதல் மாநிலமாக தேர்வுசெய்து, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவுடன் ஆறு மாத காலத்திற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தினை ஏற்படுத்த முன்மொழிந்துள்ளது. இம்முயற்சி, தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்றவாறு அனைவரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சிக்கும், பொது சேவை வழங்கலை மேம்படுத்தவும், சீரமைத்து ஒருங்கிணைக்கவும் உதவும்.
பாரீசில் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (OECD) தொழில்நுட்ப உதவியுடன் இவ்வொப்பந்தம் செயல்படுத்தப்படும். பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (OPSI) வளர்ந்த நாடுகளின் கொள்கை வகுத்தலில் பங்களிப்பு நல்கிவரும் அறிவுசார் குழு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு அரசுகளுக்கு இடையேயான அமைப்பு ஆகும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD) - பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (OPSI), ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF – Office of Innovation) ஆகிய அமைப்புகள் இந்த முத்தரப்பு ஒத்துழைப்பிற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன மற்றும் யூனிசெப் தமிழ்நாடு மற்றும் கேரளா அலுவலகம் மூலம் இது செயல்படுத்தப்படும்.
ஒத்துழைப்பின் நோக்கங்கள்:
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில், அனைத்தையும் உள்ளடக்கிய புத்தாக்க மேம்பாட்டிற்கான ஒரு சூழல் அமைப்பை உருவாக்குதல், புதுமையான சமூக பொது சேவைகளை வடிவமைத்தல், ஆய்வு செய்தல், மதிப்பீடு செய்தல், ஆகியவற்றில் அரசு துறை நிறுவனங்களின் திறன்களை மாநில திட்டக் குழு மூலம் வலுப்படுத்துதல், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) கள அனுபவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (OECD) கொள்கை நிபுணத்துவத்தை பயன்படுத்தி அரசு சார் நிறுவனங்களில் புதுமைகளை நடைமுறைப்படுத்தி, உலகளாவிய நல்ல நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை இந்த ஒத்துழைப்பின் நோக்கங்கள் ஆகும்.
உடன்படிக்கையின் முக்கிய சாராம்சங்கள்:
உலகளாவிய பார்வையினை அடிப்படையாக கொண்டு இம்முத்தரப்பு ஒத்துழைப்பு தமிழ்நாட்டிற்கான புதுமை கட்டமைப்புகளை உருவாக்கவும், மாநில அளவிலான புத்தாக்க கொள்கையை உருவாக்கவும், அரசின் பல்வேறு துறைகளில் புதுமை முயற்சிகளை வழிநடத்தவும், மதிப்பீடு செய்வதற்கும் மாநில புத்தாக்க குறியீடு உருவாக்கிடவும் உதவும். இம்முன்னெடுப்பு, புதுமை முயற்சிகளுக்கான வலுவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (Monitoring & Evaluation) கட்டமைப்புகளை வடிவமைத்தல் மற்றும் அரசு அமைப்புகளுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகளை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பால் (OECD) வழிநடத்தப்பட்டு பயிற்சியாளர்களின் பயிற்சி மற்றும் நீடித்த நிலையான திறன் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும்.
உடன்படிக்கையின் முக்கியத்துவம்:
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD) துணை தேசிய அளவில் ஒரு மாநில அரசுடன் நேரடியாக ஒத்துழைப்பை ஏற்படுத்துவது மாநிலத்தின் சாதனையின் மைல் கல்லாக அமைகிறது. பொதுத்துறை கண்டுபிடிப்புகளில் தமிழ்நாட்டை சர்வதேச அங்கீகாரத்துடன் முன்னணி மாநிலமாக நிலை நிறுத்துவதுடன், அரசாங்க அமைப்புகளுக்குள் உலகளவில் தரப்படுத்தப்பட்ட அளவிடக்கூடிய புத்தாக்க கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளவும் உதவுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களுக்கான புதுமையான பொது சேவைகளை வடிவமைத்தல், செயல்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான திறன்களை மேம்படுத்திடவும் உதவும்.
உலக நாடுகள் பங்கேற்பு:
சமூக மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் மக்கள் நல புதுமையான திட்டங்களுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாக, பல்வேறு உலக நாடுகளில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள யூனிசெப் அமைப்பானது, இந்த கூட்டாண்மையுடன் இணைந்து, 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ள “COMPASS Cohort”, நிகழ்ச்சி ஜனவரி 26, 2026-ல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க துணை தேசிய அளவில், தமிழ்நாடு மாநிலம் அழைக்கப்பட்டது இதுவே முதல் நிகழ்வாகும். இது சர்வதேச தளத்தில் தமிழ்நாட்டின் அரசு துறைகளின் நிர்வாகப் புதுமைகளை வெளிப்படுத்த ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின், அரசு துறை புதுமைகளைப் பற்றி எடுத்துரைக்க மாநில திட்ட குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல் மாநிலமாக உலகளவிலான இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது வரலாற்று சிறப்புமிக்க முக்கிய நிகழ்வாகும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b