Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 06 ஜனவரி (ஹி.ச.)
மார்கழி மாதம் முழுவதும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை பாராயணம் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் போகி பண்டிகைக்கு முன், 9 நாட்கள் ஆண்டாள் நீராட்டு உத்சவம் நடைபெறும்.
இதில், தினமும் காலையில் ஆண்டாள் மாட வீதி புறப்பாடும், தொடர்ந்து கோவிலில் உள்ள நீராட்டு மண்டபத்தில் ஊஞ்சல் சேவை உத்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஆண்டாள் நீராட்டு உத்சவம் நேற்று (ஜனவரி 05) துவங்கியது.
இதில், நேற்று காலை 7:00 மணிக்கு மாட வீதி புறப்பாடும், 8:00 மணிக்கு நீராட்டு மண்டபத்தில் ஆண்டாளுக்கு ஊஞ்சல் உத்சவம் நடைபெற்றது.
போகி பண்டிகையான வரும் ஜனவரி 14ம் தேதி காலை, தங்க பல்லக்கில் எழுந்தருளும் ஆண்டாள் மாட வீதிகளில் வீதியுலாவும், தொடர்ந்து கோவிலில் திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது.
மாலை பெருமாள், உபயநாச்சியார், ஆண்டாள், திருவடிகோவில் வரை வீதியுலாவும், கோவிலில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் போகி திருக்கல்யாண உத்சவமும் நடைபெறும். இதில், ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றுதலும், தொடர்ந்து கண்ணாடி அறையில், தரிசன தாம்பூலம் மற்றும் சேர்த்தி நடைபெறும்.
மறுநாள் ஜனவரி 15ம் தேதி தை பொங்கல் தினத்தன்று பெருமாள், உபயநாச்சியார், ஆண்டாள் சங்கராந்தி ஊர்வலம் மாட வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b