Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 6 ஜனவரி (ஹி.ச.)
நாடு முழுதும் தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
மீதமுள்ள இரண்டு சனிக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்க, கடந்த 2024ல் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இடையே நடந்த, ஊதிய மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் முக்கிய ஒன்பது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இடம்பெற்றுள்ள, ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வரும் 27ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
எங்கள் நியாயமான கோரிக்கை குறித்து மத்திய அரசு செவி சாய்க்காமல் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, ஐந்து நாள்கள் கூடுதலாக 40 நிமிடங்கள் பணிபுரிய ஒப்புக்கொண்டுள்ளோம். இதனால், வேலை நேர இழப்பு ஏற்படாது.
ஏற்கனவே, ஆர்.பி.ஐ., எல்.ஐ.சி., ஜெனரல் இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் வாரத்துக்கு ஐந்து நாள்கள் மட்டும் வேலை அமலில் உள்ளது. அன்னிய செலாவணி சந்தை, பங்குச்சந்தை ஆகியவை சனிக்கிழமைகளில் இயங்குவதில்லை.
மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படுவதில்லை. அவ்வாறு இருக்கும்போது, வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
வரும் 25 ஞாயிறு, 26 குடியரசு தின விடுமுறை என்ற நிலையில், 27ல் ஸ்டிரைக் அறிவிப்பு காரணமாக, தொடர்ச்சியாக மூன்று நாள்கள் வங்கிகள் செயல்படாது என்பதால், நிதிச்சேவை பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM