Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 06 ஜனவரி (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள மல்கிபுரம் மண்டலம் இருசு மண்டா கிராமம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான கிணறு உள்ளது.
மோரி 5 என்று அழைக்கப்படும் அந்த கிணற்றிலிருந்து எண்ணை, எரிவாயு ஆகியவற்றை எடுக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது.
நேற்று அங்குள்ள பைப் லைனில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பெருமளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டு அந்தப் பகுதி முழுவதும் வியாபித்தது.
தொடர்ந்து திறந்த வெளியில் வியாபித்த எரிவாயு தீப்பற்றி எறிய துவங்கி பெரும் சப்தத்துடன் வெடிப்புகள் ஏற்பட்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உயிருக்கு அஞ்சி அங்கிருந்து ஓட்டம் பிடித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
ஓஎன்ஜிசி அளித்த தகவல் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ் பி, தீயணைப்பு படையினர், ஓஎன்ஜிசி ஊழியர்கள் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்து நிலைமையை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் கிணற்றில் இருந்து அதிக அளவில் எரிவாயு தொடர்ந்து வெளியாகும் காரணத்தால் தீயை அணைக்க முடியவில்லை.
ஆனாலும் 15 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து அந்தப் பகுதியை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மதியம் முதல் சுமார் 60 அடி உயரத்திற்கு தீ பற்றி எரியும் காரணத்தால் அந்த பகுதியில் உள்ள தென்னை உள்ளிட்ட மரங்கள் கருகி உருக்குலைந்து விட்டன.
இந்த நிலையில் தீயை அணைப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தி அணைப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வெளிநாட்டு நிபுணர்களிடமிருந்து பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் எரியும் தீயை கட்டுப்படுத்தி அணைக்க இயலாத நிலையில் அந்த கிணறை மூடி விடவும் ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் பரப்பளவு உள்ள பகுதியில் குடியிருப்புகள் ஏதும் இல்லை.
ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள இருசு மண்டா உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த 300 குடும்பங்களை வெளியேற்றிய அதிகாரிகள் அவர்களை தற்காலிக முகாமில் தங்க வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam