Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (06.01,2025) சென்னை, புழல், பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான பல்வகைத் திறன் பூங்காவினை திறந்து வைத்து, மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்கள்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், 2024-25-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது,
தமிழ்நாடு சட்டப் பேரவையில், 24.06.2024 அன்று. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன். அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக, அவர்களின் பல்வகைப் புலன்கள் தூண்டப்பட்டு விளையாட்டு வாயிலாக கற்றல் அனுபவங்களைப் பெறத்தக்க வகையில் பல்வகைத் திறன் பூங்கா உருவாக்கப்படும் என்கின்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காக தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் மொத்தம் 20 பல்வகைத்திறன் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு பூங்காவிற்கும் தலா ரூ.13 லட்சம் வீதம் ரூ.2.6கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாவட்டத்தில் புழல் ஒன்றியத்தில் பல்வகைத்திறன் பூங்கா தற்போது முழுமையாக நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பூங்கா சாதாரண விளையாட்டிடமாக இல்லாமல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பார்த்தல், கேட்டல், தொடுதல் மற்றும் சமநிலை போன்ற பல்வேறு உணர்திறன்களைத் தூண்டும் வகையில் சிறப்பான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட பூங்கா ஆகும் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றிணைந்து விளையாடவும். விளையாட்டின் மூலம் கற்கவும் ஏதுவான சிறந்த இடமாகும். இதன் மூலம் புழல் ஒன்றியத்தில் 1 முதல் 12 வகுப்பு வரை கல்வி பயிலும் 410 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் பயனடைவர்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் / முதல் 12 வகுப்பு வரை கல்வி பயிலும் சிறப்பு கவனம் தேவைப்படும் 10482 மாணவர்கள் பயனடைவர்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மரு. மா. ஆர்த்தி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர். ச. கண்ணப்பன். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் எஸ். உமா, இணை இயக்குநர் வை. குமார், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b