பரந்தூர் வழக்கில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தின் நெருக்கடியை குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.34 ஆயிரம் கோடி செலவில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடிவு செய்தன. இந்த விமான நிலையத்தை வருகிற 2030
Madras High Court


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தின் நெருக்கடியை குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.34 ஆயிரம் கோடி செலவில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடிவு செய்தன.

இந்த விமான நிலையத்தை வருகிற 2030 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் தாலுகாவில் அமைந்துள்ள பரந்தூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில், 1,972 ஏக்கர் அரசு நிலத்தையும், 3 ஆயிரத்து 774 ஏக்கர் பொதுமக்கள் நிலத்தையும் கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி சார்பில் கடந்த மார்ச் 2024 ஆம் ஆண்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு முறையாக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும் 3 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அதேபோல், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் ஜி.சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையில், பசுமை விமான நிலையம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே உள்ள சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்யலாம்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ‘பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தற்காலிக அனுமதியை மட்டுமே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கி உள்ளது. அதன் பின்னர் மாநில அரசு அந்த இடத்தை நேரடியாக ஆய்வு செய்து, அவை வனப்பகுதியா? நீர்நிலைகளா? என்பதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், திட்டத்தை தொடங்குவதா, வேண்டாமா? என்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்கும். பரந்தூர் விமான நிலைய பணிகளை மாநில அரசு நேரடியாக ஆய்வு செய்யவில்லை. மேலும், நிலம் கையகப்படுத்துவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களையும் நடத்தவில்லை. அதனால், சட்டத்திற்கு புறம்பாக நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட ஏழு அமைச்சகங்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN