Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)
சென்னை லோக்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜனவரி 06) சந்தித்து பேசினார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
2021ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து பட்டியலை வழங்கியுள்ளோம்.
ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க கவர்னரை வலியுறுத்தியுள்ளோம். திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழகத்தை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளி உள்ளது. இதனைப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டுகிறோம்.
உயர் கல்வித்துறையில் 1,500 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாகத்தில் 64,000 கோடி ரூபாய், பத்திரப்பதிவு துறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய், சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய், ஹிந்து சமய அறநிலையத் துறையில் 1,000 கோடி ரூபாய், டாஸ்மாக்கில் 50 ஆயிரம் கோடி ரூபாய், நீர்வளத்துறையில் 17 ஆயிரம் கோடி ரூபாய், எரிசக்தி துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. மொத்தமாக ஆட்சி பொறுப்புக்கு வந்த 4.5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
திமுக அரசின் ஊழல்களுக்கு முழுமையான ஆதாரம் இருப்பதால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஊழல் செய்வதை தவிர திமுக தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை.
மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது திமுக அரசு வழங்குகிறது.
பொங்கல் பரிசு தொகையை 3 ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
கிட்னி திருட்டு குறித்து அறிக்கை அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b