முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரைவைக் கூட்டம்
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) 2026 ஆம் ஆண்டு ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 20-ந்தேதி ஆரம்பமாகிறது. முதல் நாளில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் உரையை வாசிக்கவிருக்கிறார். வழக்கமாக சட்டசபை கூட
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரைவைக்  கூட்டம்


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

2026 ஆம் ஆண்டு ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 20-ந்தேதி ஆரம்பமாகிறது. முதல் நாளில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் உரையை வாசிக்கவிருக்கிறார்.

வழக்கமாக சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன், அரசு எடுத்துக் கொள்ள இருக்கும் முடிவுகளைப் பற்றி விவாதிக்க அமைச்சரவை கூடுவது நடைமுறையாக உள்ளது.

அதன்படி, இன்று (ஜனவரி 06) காலை 11 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டமாக இருப்பதால், அனைத்து அமைச்சர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அரசின் உரையை கவர்னர் ஏற்கனவே புறக்கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் உரையை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

சமீபத்தில் அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விரிவான ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர் பிரிவுகளின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்பதற்கான முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம்.

முக்கியமாக, சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தேர்தலுக்கு முன் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன.

எனவே, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம், அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b