Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஜனவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை - மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே வெள்ளிரிக்காடு கிராமத்தில் கள்ளச்சாரயம் விற்பனை செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் இதே கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக நடைபெற்ற கள்ளச்சாராயத்தால் 60 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான உயிர்களை பறித்த கள்ளச்சாராயத்தின் விற்பனையையையும், அதற்கு உடந்தையாக செயல்படுவோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலைதூக்க காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு கைதான நபரிடம் முழுமையான விசாரணை மேற்கொண்டு, அதன் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam