Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 06 ஜனவரி (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜனவரி 9 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு 2026 ஆம் ஆண்டில் சனவரி திங்களில் மாநிலம் முழுவதும் குறள் வாரவிழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று குறளாசிரியர் மாநாடு நடத்த தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 ஆசிரியர்கள் (அரசு / அரசு உதவிபெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்), 15 அரசு ஊழியர்கள் (அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை / அனைத்து நிலை அலுவலர்கள் / ஊழியர்கள்) ஆக மொத்தம் 30 நபர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
15 ஆசிரியர்கள் மற்றும் 15 அரசு ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் 09.01.2026 ஆம் நாளன்று (வெள்ளிக்கிழமை) 02.00 பி.ப. மணிக்கு புனித மரியன்னை கல்லூரியில்) நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தேர்வு தொடங்க ஒருமணி நேரத்திற்கு முன்பு வருகை புரியவேண்டும்.
தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள துலங்கல் குறியீடு (QR Code வழியாக பதிவுசெய்து கொள்ளலாம். பதிவு செய்யாதவர்கள் தேர்வுமையத்திற்கு நேரடியாக வந்தும் பதிவுசெய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b