Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)
ஆட்சி முடியும் தருவாயில் இலவசங்களையும் பணத்தையும் அள்ளி வீசினால் திமுக ஆட்சியின் அவலங்களை மூடி மறைத்து விட முடியுமா? என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5000 கொடுக்க வேண்டும் என்று பொங்கிய திமுக, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான்கு பொங்கல் பண்டிகைகள் கடந்துவிட்டன.
இதில் ஒருமுறை கூட பொதுவெளியில் மக்களுக்கு வாக்களித்தபடி பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000-த்தைக் கொடுக்கவில்லை.
ஆனால், தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்களை மடைமாற்ற வேண்டும் என்ற நோக்கில், தடாலடியாக ரூ.3000-த்தைப் பொங்கல் பரிசாக அறிவித்து படாடோபமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமன்றி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது இந்த விளம்பர மாடல் அரசு.
இலவச லேப்டாப் வழங்குவோம் என்ற திமுகவின் பொய் வாக்குறுதியை நம்பி அவர்களுக்கு வாக்களித்த மாணவர்கள் எல்லாம் இந்த நான்கரை ஆண்டுகளில் படிப்பை முடித்து கல்லூரியை விட்டே சென்றிருப்பார்கள்.
பொங்கல் பரிசாக ஆண்டுக்கு ரூ.5000 என்ற திமுகவின் பொய் பரப்புரையை நம்பிய தமிழக மக்கள் இதுவரை ரூ.20,000-த்தை இழந்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறது திமுக அரசு?
ஆட்சி முடியும் தருவாயில் இலவசங்களையும் பணத்தையும் அள்ளி வீசினால் திமுக ஆட்சியின் அவலங்களை மூடி மறைத்து விட முடியுமா? அல்லது தமிழக மக்களுக்கு திமுகவின் மீதுள்ள வெறுப்பை தான் அழித்து விட முடியுமா? தூண்டிலில் புழுவை சொருகி மீன்களைப் பிடிப்பது போலத் தமிழக மக்களைப் பணத்தை வைத்து விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் தேர்தல் கபடநாடங்களைத் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்கப் போகிறார்கள்!
இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ