Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 06 ஜனவரி (ஹி.ச)
விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய மூன்று இடங்களிலும் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடிக்கவிருப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழியின் இமெயிலுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.
இதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி, உடனடியாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரனீத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய இடங்களில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு விரைந்த போலீசார், அங்கு பணியில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிய உதவும் கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள், வரவழைக்கப்பட்ட 3 நீதிமன்ற வளாகங்களிலும் தற்போது வெடிகுண்டுகள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீதிமன்றங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN