அரசு ஊழியர்கள் திமுகவினரின் சூழ்ச்சிக்கு இரையாகி விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் - வி.கே.சசிகலா
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறியதிமுக புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம் என வி.கே.சசிகலா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
Sasikala


Tw


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறியதிமுக புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம் என வி.கே.சசிகலா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த திமுக தலைமையிலான அரசு தற்போது புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருப்பது தமிழக மக்களை வழக்கமாக ஏமாற்றுகின்ற மற்றொரு நாடகமாகத்தான் பார்க்கமுடிகிறது.

திமுகவினர் கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 309ல் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 56 மாதங்களை முடித்துவிட்ட நிலையில், ஆட்சியை விட்டு இறங்க இன்னும் 4 மாதங்களே உள்ள சூழலில், அரசு ஊழியர்களை ஏமாற்றும் விதமாக ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருப்பது வருகின்ற தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களை மீண்டும் ஏமாற்றும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை.

திமுக தற்போது அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை எப்பொழுது செயல்படுத்த போகிறது என்ற எந்த விவரமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக திமுக இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் இதிலும் அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பங்களிப்புகொண்ட ஓய்வூதிய திட்டத்தில் (CPS) மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்து, அரசும் 10% செலுத்தி இதற்கான வட்டி 8% எல்லாம் சேர்த்து மொத்த தொகையையும் ஊழியர்கள் திரும்ப பெற முடியும். தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த CPS என்ற ஓய்வூதிய திட்டத்தில் ஒரு ஊழியர் பணி ஓய்வு பெறும் போது கிடைக்கப்பெறும் தொகையை விட குறைவான பலனைத்தான் தற்போது கொண்டு வந்துள்ள இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பெற முடியும் என்ற நிலைக்கு அரசு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களுக்கு திமுக தற்போது அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டமானது ஒரு ஏமாற்று திட்டம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.

திமுக தலைமையிலான அரசின் பித்தலாட்டத்தை அரசு ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்த பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் எந்த பிடித்தமும் செய்வதில்லை. ஆனால் இன்றைக்கு திமுக அறிவித்துள்ள இந்த புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் 10% பிடித்தம் செய்யப்படுவதோடு அதை திருப்பி ஊழியர்களுக்கு தரப்படுவதில்லை. மொத்தத்தில் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து அதைத்தான் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, அரசு ஊழியர்களின் சட்டை பையிலிருந்து அவர்களின் பணத்தை எடுத்து, அவர்களுக்கே ஓய்வூதியமாக திருப்பி வழங்கும் திட்டம் தான் தற்போது திமுக கொண்டுவந்துள்ள இந்த புதிய ஓய்வூதிய திட்டம். இதைத்தான் திமுகவினர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

மேலும், திமுக தலைமையிலான அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதால் முதலாம் ஆண்டு ரூபாய் 13 ஆயிரம் கோடி என்றும், வருடாவருடம் ரூபாய் 11 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு செலவு ஏற்படுவதாக அறிவித்து இருப்பதன் மூலம் ஒரு பச்சைப்பொய்யை சொல்லியிருக்கிறது.

உண்மையில் கணக்கு பார்த்தால் ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு ஏற்படாது என்றே தெரியவருகிறது. எனவே, இவ்வாறு அறிவித்து இருப்பதால் இதன் உள்நோக்கம் என்னவென்று திமுகவினருக்கே வெளிச்சம்.

எனவே, திமுகவினர், அரசு ஊழியர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு அவர்களுக்கு உண்மையாக இருங்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய திட்டங்களை கொண்டு வாருங்கள். அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கக்கூடிய ஆட்சி என்றால் அது புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியாகத்தான் இருக்கமுடியும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அரசு ஊழியர்கள் திமுகவினரின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாமல் விழிப்புடன் இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ