2026 சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க அதிமுகவுடன் பா.ம.க கூட்டணி - எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து அன்புமணி அறிவிப்பு
சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனி
2026 சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க அதிமுகவுடன்  பா.ம.க கூட்டணி - எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து அன்புமணி அறிவிப்பு


சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று

(07-01-26) பா.ம.க தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகன் உடனிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

அன்புமணி தரப்பு பாமக உடன் நாங்கள் கூட்டணியை அமைத்து இருக்கிறோம். அதிமுக, பாமக கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள், தொண்டர்கள் விரும்பியவாறு கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்களது கூட்டணி வெற்றி கூட்டணி.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டத்தை கொடுக்கிற அரசு அமைய எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அதற்கு எங்களது கூட்டணியில் அதிமுக, பாஜ, பாமக ஆகிய 3 கட்சிகளும் இணைந்து இரவு, பகல் பார்க்காமல் தேனீக்கள், எறும்புகள் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எங்களது கூட்டணியில் தற்போது பாமக இணைந்து இருக்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கையை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்பு அறிவிப்போம்

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து அன்புமணி பேசியதாவது,

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க இணைந்து இருக்கிறது, எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். வலுவான கூட்டணி.

எங்களது நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கிற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்.

மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்த்து இருக்கிறோம்.

சமீபத்தில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட போது கிராமத்தில் மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்தோம். ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.

உறுதியாக எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்

என்று கூறினார்.

ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்ற கேள்விக்கு?

எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பா.ம.கவுக்கு அதிமுக 15 தொகுதிகள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், 20க்கும் மேற்பட்ட இடங்களை வழங்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b