Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், திமுக அரசு வாக்குறுதியை மீறி பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை வதந்திகள் மட்டுமே என்றும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி குழப்பமடைய வேண்டாம் என்றும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டது.
இந்த விலை குறைப்பு இன்னமும் தொடர்கிறது. இதனை மாற்றி தற்போது எந்தவித விலையேற்றமும் செய்யப்படவில்லை என்றும் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் புதிய வகை பால் பாக்கெட்டின் விலையை வைத்து பழைய பால் விலை உயர்த்தப்பட்டதாக தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
தற்போது ஆவின் நிறுவனம் “கிரீன் மேஜிக் பிளஸ்” என்ற புதிய வகை பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பால் பாக்கெட்டில் வைட்டமின் ஏ மற்றும் டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதுடன், கொழுப்புச் சத்து 4.5 சதவீதமாகவும், இதரச் சத்துக்கள் 9 சதவீத S.N.F ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் ஊட்டச்சத்து அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், இது தனிப்பட்ட புதிய தயாரிப்பாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, முன்பே விற்பனை செய்யப்பட்டு வந்த பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் இன்றும் அதே விலையில் கிடைக்கிறது. அந்த பால் பாக்கெட்டில் கொழுப்புச் சத்து 4.5 சதவீதமாகவும், இதரச் சத்துக்கள் 8.5 சதவீத S.N.F ஆகவும் உள்ளது. இந்த பழைய பால் பாக்கெட்டின் உற்பத்தி நிறுத்தப்படவில்லை என்றும், விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய தயாரிப்பின் விலையை வைத்து மொத்த ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என விளக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலும் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் மற்றும் பால் உபப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னையில் 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பால் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகையான பால் பாக்கெட்டுகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இந்த வகைகளின் விலை மற்றும் தரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் எந்த தடையும் இன்றி ஆவின் பால் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதாக வெளியிடப்படும் செய்திகள் ஆதாரமற்றவை என்றும், அவற்றை நம்பி பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது. தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும்.
Hindusthan Samachar / ANANDHAN