Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 07 ஜனவரி (ஹி.ச)
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய 3 ஊர்களில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடம் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரம், 16-ம் தேதி பாலமேடு மற்றும் 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுகள் நடைபெற உள்ளன. இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகளுக்கான பந்தக்கால் இன்று (ஜனவரி 07) நடப்பட்டது. தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. அதே போல், பாலமேட்டில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல் அருகே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பந்தக்கால் நடப்பட்டது.
இதையடுத்து வாடிவாசல் மைதானம், பார்வையாளர்கள் மாடங்களுக்கு வண்ணம் பூசுதல், காளைகள் வரும் பகுதிகள் மற்றும் விளையாட்டு களமான திடலை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், பொதுமக்கள் வசதிக்காக இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலுக்கு அழைத்து வரும் பகுதிகள் மற்றும் போட்டி நடக்கும் மைதானங்களில் பொக்கலைன் எந்திரங்கள் மூலம் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b