ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 6 நாட்கள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி
கோவை, 07 ஜனவரி (ஹி.ச.) தேசிய புலிகள் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்காலப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி இன்று (ஜனவரி 07) தொடங்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, மான
Anaimalai Tiger Reserve


கோவை, 07 ஜனவரி (ஹி.ச.)

தேசிய புலிகள் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்காலப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி இன்று (ஜனவரி 07) தொடங்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை மற்றும் உலாந்தி ஆகிய வனச்சரகங்களில், இன்று முதல் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வரை ஆறு நாட்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

மொத்தம் 32 சுற்றுகளாக பிரிக்கப்பட்ட 62 நேர்கோட்டுப் பாதைகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில் 186 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல் மூன்று நாட்களில் புலி, சிறுத்தை, கருசிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணி விலங்குகளின் இருப்பை கண்டறிய, அவற்றின் கால்தடங்கள், நக கீறல்கள், விலங்குகளின் எச்சங்கள் போன்ற மறைமுக அடையாளங்கள் மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதை முறையில் காட்டுயானை, மான் வகைகள், பறவை இனங்கள் மற்றும் தாவர இனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.

கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், முழு விவரங்களும் தொகுக்கப்பட்டு தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட ஆனைமலை அடுத்த நவமலை பகுதியில் வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனவிலங்கு வளம் மற்றும் உயிரியல் சூழல் நிலையை மதிப்பீடு செய்ய உதவும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN