Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)
திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.
இந்த நிலையில், நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்திருக்கிறது. திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கிறது. யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக?
செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர், ஐயா திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாகக் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ