Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், விபத்தில்லா ஆலைகளுக்கான மாநில அளவிலான பாதுகாப்பு விருதுகள் மற்றும் சிறந்த உழைப்பாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசியதாவது;
இந்தியாவிலேயே அதிகப்படியான தொழிற்சாலைகளையும், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த 56 மாத கால ஆட்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தை உலகிற்கே ஒரு 'ரோல் மாடல்' மாநிலமாக மாற்றியுள்ளார். தமிழகத்தில் தற்போது 54,072 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் சுமார் 28 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இதுவரை 895 முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 10.14 லட்சம் கோடி ஆகும்.மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 15.24% பேரும், மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தமிழகத்தில் உள்ளனர் என்றார்.
இந்தியாவின் மொத்த பெண் தொழிலாளர்களில் 43% பேர் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். இது பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்பதற்குச் சான்றாகும்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், பாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை நேரில் சென்று சந்தித்து, உணவு மற்றும் தங்குமிட வசதி தொடர்பான அவர்களின் கோரிக்கைகளை உடனடி நடவடிக்கையின் மூலம் தீர்த்து வைத்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
பெண் தொழிலாளர்களின் தங்குமிட வசதிக்காக சுமார் ரூ. 700 கோடி மதிப்பீட்டில் 20,000 பெண்கள் தங்கும் வகையில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் (தோழியர் விடுதிகள்) கட்டப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளின் போது, தொழிலாளர் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
பட்டாசு மற்றும் கட்டுமானத் துறை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவை தமிழக அரசே ஏற்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 134 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிவாரணத் தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சொந்த வீடில்லாத 10,000 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவியுடன் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam