முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - தமிழக அரசு விளக்கம்!
தமிழ்நாடு, 07 ஜனவரி (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்
எஸ். பி.வேலுமணி


தமிழ்நாடு, 07 ஜனவரி (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக பொதுத்துறை செயலாளர், விஜிலன்ஸ் ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், விஜிலன்ஸ் ஆணையர் மணிவாசன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வழக்கு தொடர்பாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பக்கங்க்ள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை மொழிபெயர்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 20 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam