Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 07 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது நிலவும் சூழ்நிலையை ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.
கொடைக்கானல் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்னவனூர் கிராமத்தில், வனத் துறை கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இந்த இடம் பிரபலமாக அறியப்படுகிறது.
இங்கு பசுமையாக புல்வெளி மற்றும் மலை முகடுகள் நடுவே உள்ள ஏரி காண்போரை ஈர்ப்பதாக உள்ளது. குளிர்ந்த வானிலை, ரம்மியமான காட்சிகள் என வியக்க வைப்பதால் தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து என மன்னவனூர் கிராமம் அழைக்கப்படுகிறது.
மேலும் மன்னவனூர் ஏரியில் பரிசல், படகு சவாரி ஆகிய அம்சங்கள் உள்ளன. ஏரியை சுற்றி குதிரை சவாரி செய்தும் மகிழலாம். இங்கு மன்னவனூர் ஏரிக்கு மேல் ஜிப்லைன் சாகசதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். வார விடுமுறை நாட்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் விருப்பமான இடமாக மன்னவனூர் உள்ளது.
இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக, கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையம் மற்றும் பேரிஜம் ஏரி இன்று (ஜனவரி 07) மூடப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் செல்லத் தற்காலிக தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b