Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 7 ஜனவரி (ஹி.ச.)
டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கி வாட்டி வதைத்து வருகிறது.
அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதே போல் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், பீஹார், உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்றும், நாளையும் கடும் குளிர் நிலவக்கூடும். இன்று முதல் (ஜனவரி 7) முதல் ஜனவரி 9ம் தேதி வரை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இந்த வாரம் கடுமையான குளிர் நிலவும். குளிர் அலையைத் தவிர, அடுத்த 7 நாட்களுக்கு வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் காலை நேரங்களில் அடர்ந்த மூடுபனி நிலவ வாய்ப்புள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் அடுத்த இரண்டு நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும். கடந்த 15 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இந்தாண்டு மட்டும் அதிகமான குளிர் பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM