Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஜனவரி (ஹி.ச)
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசே பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்பட காரணம் என உயர்நீதிமன்றத் தீர்ப்பு உண்மையை உரைத்துள்ளது என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதி செய்து, திமுக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.
மேலும், தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற திமுக அரசின் வாதத்தை நகைப்புக்குரியது எனக் கூறி ஏற்க மறுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை கொஞ்சம் கூட மதிக்காமல் செயல்பட்ட திமுக அரசே பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்பட காரணம் என உயர்நீதிமன்றத் தீர்ப்பு உண்மையை உரைத்துள்ளது.
அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு திமுக அரசு செயல்பட்டதாக உயர்நீதிமன்றம் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
சுமூகமாக கையாள வேண்டிய ஒரு விவகாரத்தை, தேர்தல் நேரத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, அதனால் அரசியல் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தில் வீண் பிரச்சனையை திமுக அரசு உண்டாக்கியது வெட்கக்கேடானது.
உயர்நீதிமன்றத்தின் தொடர் உத்தரவுகளை மதிக்காமல், சில அதிகாரிகளும், ஆளும் திமுக-வினரை குளிர்விக்கும் நோக்கில் செயல்பட்டதும் ஏற்கத்தக்க செயல் அல்ல.
இத்தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தீர்ப்பை சட்டத்திற்கு புறம்பானது என்கிறார். நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்யுங்கள். அதை விடுத்து, அதை சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறுவது ஒரு சட்டத்துறை அமைச்சருக்கு அழகா?
மேலும், சுடுகாட்டில் தானே பிணத்தை எரிப்பார்கள் என ஒரு கொச்சையான வாதத்தை வைக்கிறார். எதை எதோடு ஒப்பீடு செய்கிறார்?
திருப்பரங்குன்றம் என்பது எங்கள் உணர்வு சார்ந்தது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் முதலாம் படைவீடு இது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்தும் வகையில் ஒரு சட்டத்துறை அமைச்சர் பேசுவது என்பது, திமுகவின் சுயரூபத்தைக் காட்டுகிறது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கெல்லாம் உரிய பாடத்தை மக்கள் இவர்களுக்கு புகட்டுவர்.
தங்களுக்கு வேண்டிய தீர்ப்பை வழங்கவில்லை என்பதற்காக ஒரு மாண்புமிகு நீதியரசர் மீது ஜாதி, மதச் சாயம் பூசி, Impeachment வரை சென்று அற்ப அரசியலை செய்த திமுக, தற்போது அதே தீர்ப்பை உறுதி செய்துள்ள நீதிபதிகளையும் அவ்வண்ணமே அச்சுறுத்த முயற்சிக்குமா?
மக்கள் சேவை என்பதை முற்றுமாக மறந்து, எதிர்க்கட்சியான எங்களிடம் அற்ப அரசியல் செய்து, பொதுமக்களிடம் அரசியல் அடக்குமுறைகளை ஏவி, தற்போது அதே பாணியை நீதிபதிகள் மீதும் திமுக கையாள்வது என்பது அரசியல் படுபாதாளத்திற்கு திமுக சென்றதையே காட்டுகிறது.
இனியாவது தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எண்ணத்தை கைவிட்டு, சுமூகமான தீர்வு நோக்கி செயல்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ