Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 ஜனவரி (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் “திருக்குறள் வாரம்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரிமுனை வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வின் போது அறிவித்திருந்தார்.
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் 11.1.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் “திருக்குறள் வாரம்” கொண்டாடப்படும் என, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு 31.12.2024 அன்று குமரிமுனை வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வின் போது அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திருக்குறள் குறளாசிரியர் மாநாடு, அரசு அலுவலர்களுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான திருக்குறள் போட்டிகள், கல்லூரி மாணவ, மாணவியருக்கான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள், திருக்குறள் நாட்டிய நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பெரும் முயற்சியால் கடந்த பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு இசையமைக்கப்பட்ட திருக்குறளும், தமிழ் இலக்கிய பாடல்களும் இசை வடிவில் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட்ட இசையாக நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியானது வரும் 11.1.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM